Saturday, February 24, 2007

Vadaloor Vallalar

ஏந்த ஊயிர்களிடத்தும் பாராட்ட வேண்டிய இரக்கம், சீவகாருண்ய ஒழுக்கம், அன்பு போன்ற பிற நல்ல விஷயங்களை மக்களிடத்து எடுத்துரைத்த வல்லளாரின் தாய் வழி பூர்வீகம் சின்னக்காவனம். இந்த ஊர் பொன்னேரிக்கு மிக அருகிலுள்ளது. ஆனால் இது போன்ற ஒரு மகா ஜீவி வாழ்ந்த ஒரு சுவடு கூட இப்பொழுது அங்கு இல்லை என்பது மிக வருந்த வேண்டிய விஷயம். சிறிது காலம் பொன்னேரியில் வாழ்ந்த இவர் கடலூர் மாவட்டத்திலுள்ள வடலூர் எனும் சிற்றூரில் மடம் அமைத்து ஏழை எளியோரின் பசியாற அன்னதான ஏற்பாடு செய்தார். அன்று அவர் ஏற்றிய ஜோதி இன்று வரை அனையாமல் காக்கப்பட்டு வருகிறாது.

யார் ஒருவர் பொதுவாழ்க்கையில் இருந்தாலும் ஏதாவது ஒரு வழியில் எதிர்ப்பு வரும் என்பது இயற்கை. அது போலவே வல்லளாரின் வாழ்க்கையிலும் நடந்தது. அவரை எதிர்த்து, அவர் எழுதிய புத்தகத்திலுள்ள பிழையை எதிர்த்து ஒருவர் வழக்கு பதிவு செய்தார். வழக்கு மன்றத்திலிருந்து அவருக்கு சம்மன் வந்திருந்தது. சம்மனை உதாசீனம் செய்வார் என்று பலர் நினைத்தனர். ஆனால் குறித்த தேதியில் அவர் வழக்கு மன்றத்திற்க்கு சென்று வழக்கை சந்திக்க சாட்சிக் கூண்டின் அருகில் வரும் போதே வழக்கு தொடுத்தவர் எழுந்து நின்று வணக்கம் சொல்லி மரியாதை செய்தாராம். இதுபோல் எதிரியாக இருந்தாலும் கூட மறியாதை செய்யும் அளவிற்கு உத்தமராக வாழ்ந்தவர் அவர்.

இதேபோல் காந்தியடிகளின் வாழ்விலும் ஒரு சம்பவம் நடந்தது. மகாத்மா வாழ்க்கையில் வழக்கு மன்றத்திற்கும் அங்கிருந்து சிறைச்சாலைக்கும் செல்வது வழக்கமான ஒன்று. அப்படி ஒருமுறை அவர் வழக்கு மன்றத்திற்கு சென்ற பொழுது வெள்ளைக்காற நீதிபதி மகாத்மாவிற்கு எழுந்து நின்று மறியாதை செய்தாராம். இதுபோல் வாழும் பொழுதே உச்சியைத் தொட்டவர்களின் ஆசிர்வாதத்துடன் வழ்க்கையில் மேலும் மேலும் செல்வோம்.

மீண்டும் சந்திப்போம்,
கிருஷ்ணபிரபு.

Sunday, January 14, 2007

Arani River

உலகின் தலைசிறந்த நாகரீகங்களில் ஆற்றங்கறை நாகரீகமும் ஒன்று. பொன்னேரி ஆற்றங்கறை நாகரீகத்தை அடிப்படையாகக்கொண்டது. பொன்னேரி சிவன் கோவிலுக்கு பின்புறம் ஆரணியாறு ஓடுகிறது. இந்த ஆறு ஊத்துக்கோட்டையில் இருந்து ஆரம்பமாகிறது.
ஆந்ராவில் இருந்து பாயும் கிருஷ்ணா நதி ஊத்துக்கோட்டையின் வழியாக தமிழகத்தில் நுழைகிறது. ஊத்துக்கோட்டையில் இருந்து இந்த நதி கொடுதலை ஆறு மற்றும் ஆரணி ஆறு என இரண்டாக பிரிந்து கடலில் சென்று சங்கமமாகிறது.
கொடுதலை ஆறு சோழவரம் ஏரியில் சேமிக்கப்பட்டு கோடைகாலத்தில் சென்னை மக்களின் தாகத்தை தீர்க்கிறது. சேமிக்கப்போக மீதமுள்ள தண்ணீர் காரனோடை பாளம், நாபாளத்து பாளம் வழியாக வங்கக்கடலில் சென்று கலக்கிறது.
ஆரணி ஆறு பெரியபாளயத்தில் குடிகொண்டுள்ள பவானி அம்மனின் சன்னிதானத்தின் வழியாக பாய்ந்தோடி பொன்னேரி சிவன் கோவிலின் வழியாக பெரும்பேடு முருகன் கோவிலை கடந்து சென்று வங்காள விரிகுடாவில் சங்கமமாகிறது. பொன்னேரி அடுத்துள்ள ஆலாடு எனும் இடத்தில் ஆரணி ஆற்றின் குறுக்காக அணை கட்டி தண்ணீரை சேமித்து சுற்றிலுமுள்ள விவசாயிகளின் பாசனத்திற்கு பயன்படுமாறு செய்துள்ளனர்.
பொன்னேரி ஆற்றங்கரை ஓரமாக கும்மனஞ்சேரிக்கு ஒரு கிலோ மீட்டருக்கு அருகில் தொழு நோயாளிகளுக்கு அரசாங்கம் குடில் தந்து அவர்களை பராமரிக்கிறது. பெரும்பேடு முருகர் சிலை இந்த ஆற்றில் பல ஆண்டுகளுக்கு முன் கிடைத்ததாகவும், கிடைத்த சிலையை ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து கோவில் கட்டி வழிபடுவதாகவும் என் பாட்டி கூறுவாள்.

என் பாட்டியின் பால்யகாலத்தில் சித்திரை மாதத்தில் கூட முழங்கால் அளவிற்கு பொன்னேரி ஆற்றில் தண்ணீர் ஓடிப் பாயுமென கூறுவாள். ஆனால் இன்று மழைகாலத்தில் கூட சில நாட்களுக்கு மட்டுமே இந்த ஆற்றில் தண்ணீரை பார்க்கமுடிகிறது.
ஒரு நாட்டின் உண்மையான மதிப்பே(belongings) அந்நாட்டின் இயற்கை வளங்களான காடு, மலை மற்றும் வற்றாத ஜீவ நதிகள் மட்டுமே. பல காலமாக தான் ஓடிப்பாயும் இடத்தை சுற்றியுள்ள பல கிராமவாசிகளுக்கு பயனளித்த இந்த ஆறு பொய்த்துப்போக காரணம் மக்களின் அறியாமையும், அரசாங்கத்தின் கவனக்குறைவும் மட்டுமே.
மீண்டும் சந்திப்போம்,
கிருஷ்ண பிரபு.

Sunday, January 7, 2007

God Siva temple in ponneri

என்னுடைய பாட்டி வீட்டில் தினமும் சிவ பூஜை இருக்கும். பூஜைக்கு தேவையான பூக்களை தினமும் அதிகாலையில் நான் பறித்து பாட்டியிடம் கொடுப்பேன். பாட்டி பூவை மாலையாக்கி இறைவனுக்கு படைப்பார்கள். மீதமுள்ள மலர்களை அருகிலுள்ள சிவன் கோவிலுக்கு நான் எடுத்துச்செல்வேன். பண்டைய கால அரசர்களால் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்ட மிகவும் பழைமை வாய்ந்த கோவில் இது. காற்றில் இலை அசையும் சப்தமும், தன்னுடைய குஞ்சுகளுக்கு தீனி கொண்டுவரும்போது பறவைகள் எழுப்பும் இறைச்சலும் கடவுளுக்கு கேட்குமெனில் நானும் அமைதியுடன் கூடிய சப்தத்துடன் கோவிலுக்கு சென்ற காலடி ஓசைகூட கடவுளுக்கு கேட்டிருக்குமோ?. நல்ல கோடையில் கூட கோவிலுக்குள் உள்ள குளுமை என்னை ஆச்சர்யமூட்டும். பண்டிகை நாட்களில் இந்த கோவிலுக்குள் போகவே முடியாது. எனக்கு எங்கேயும் வராத குரோதம் அங்கேதான் வரும். ஏதோ அமைதியான இடம் என்று மன அமைதிக்காக வரலாம் தவறு இல்லை. வாழ்க்கையில வணக்கம் போட்டு போட்டே முன்னேற நினைகும் மனிதர்கள் எல்லா இடங்களிலும் இருப்பார்கள். அப்படி வணக்கம் போடுகிறவர்களுக்கு பண்டிகையென்று தெரியவரும் போது சிவன் மேல் உள்ள மரியாதை மிகவும் கூடிவிடும். அதை தவறு என்றும் சொல்வதற்கில்லை. எல்லாருக்குமே அதில் ஒரு இனம் புரியாத நிம்மதி.
கோவிலுக்குள் சென்றதும் முதலில் சிவ தரிசனம் கிடைக்கும். அவருக்கு அருகில் அம்மன் தரிசனம் பிறகு ஆழ்வார்கள், சூரிய பகவான், வினாயகர், தக்ஷணா மூர்த்தி, பிரம்மா, அபிதகுஜாம்பாள், முருகர் - வள்ளி, தெய்வானையுடன், ஆஞ்சநேயர், ஐயப்பன், கடைசியாக பைரவர் என்று சுற்றி சிவனிடம் வந்து சேரலாம். என் பாட்டி சொல்லிய இதிகாச கதைகளை சொல்ல வேண்டுமெனில் சுதா மூர்த்தி எழுதியதைப்போலவே "பாட்டி சொன்ன கதைகள்" என ஒரு புத்தகமாகவே வெளியிடலாம்.
கோவிலுக்குள் ஒரு பாதாள அறை செல்கிறது. இதுவரை அதனுள் சென்றவறில்லை என பாட்டி சொல்லுவாள். எனினும் பண்டைய காலத்தில் பகைவர்களிடமிருந்து தப்பிச்செல்ல முன் யோசனையுடன் கட்டப்பட்ட ஒன்றாகவும் இருக்கலாம். எந்த கோடையிலும் வற்றாத பெரிய குளம் கோவிலுக்கு வெளியில் உள்ளது. இந்த குளத்திற்குள் ஏழு குளம் உள்ளதாகவும் அது பாதாளத்தில் சென்று முடிவதாகவும் பாட்டி கூறுவாள். பண்டைய கால அரசாட்சியில் குளத்திற்கு 100 அடிக்குள் மனித கழிவுகளை வெளியேற்றுபவர்களுக்கு அதிகபட்சமாக சிறைதண்டனை வரை உண்டு. ஆனால் இன்று மக்களாட்சி என்பதால் எது வேண்டுமானாலும் செய்யலாம். ஏனெனில் மக்களால் மக்களுக்காக நடைபெறும் மக்களாட்சியில் மக்களின் வசதிக்காக செய்துகொள்ளும் எதுவும் தவறில்லை. இல்லையெனில் அடுத்த மக்களாட்சி வேறு மனிதர்களால் ஆட்சி செய்யப்படும். இந்த குளத்தின் அருகில் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பாட்டம் சொல்லித்தருகிறார்கள். பெண்கள் கூட சிலம்பு பயிற்சி செய்வதை நான் நேரில் பார்த்ததுண்டு. கோவிலுக்கு பின்னால் ஆரணி ஆறு செல்கிறது. ஆறுடன் சேர்ந்து அடுத்த கட்டுரையில் பயணம் செய்வோம்.
அன்புடன்,
கிச்சா,

Monday, January 1, 2007

My First Visit

பொன்னெரின்னு சொன்னாலே எனக்கு முதலில் ஞாபகம் வருவதே அம்பிகா காப்பிதூள். என் அம்மாவுக்கு அம்பிகா காப்பின்னா உயிர் மாதிரி. பாட்டி கதையில வருமே. ஒரு ராட்சஷன் இருந்தானாம் அவன் உயிரு ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி, ஒரு கிளியோட உடம்புல இருக்குன்னு.... அந்த மாதிரி எங்கம்மா உயிரு அம்பிகா காப்பி பொடியில இருக்குது. என் சின்ன வயசுல அம்மா காப்பிபொடி வாங்க பொன்னேரி அனுப்புவா. போயிட்டு வரவும், காபிதூள் வாங்கவும் மட்டும் தான் அம்மா பைசா தருவா. அதனால பைசாவ தொலச்சிட கூடாது கடவுலேன்னு வேண்டிக்குனே நேரா கடைக்கு போய் காப்பித்தூள் வாங்கிக்குனு வந்துடுவேன். அப்படி இப்படி திரும்பம வீட்டுக்கு வந்துடுவேன். சீக்கிரமே வந்துட்டயேடா சமத்துன்னு எங்கம்மா பாராட்டுவாங்க. என்னுடைய பயம் அவங்களுக்கு தெரிஙஞ்சிருக்க ஞாயம் இல்ல. பிறகு என்னுடைய பத்தவது படிப்பு முடிச்சவுடனே பொன்னேரி ஸ்கூல்ல admission கிடைத்தது. பிறகு தினமும் பொன்னேரி போய் படிச்சிட்டு வருவேன். அப்பதான் என் சின்ன பாட்டி பொன்னேரியில இருக்க விஷயமே தெரிஞ்சது. இங்கயே தங்கி படிடான்னு பாட்டி சொன்னாங்க. சரின்னு அங்கயே தங்கி படிக்க ஆரம்பமாச்சி. பொதுவா நான் கிராமத்து ஆளு.... டவுன் வாழ்கைய அனுசரிச்சி போக ஆரம்பத்துல ரொம்ப கஷ்டப்பட்டேன். எவ்ளோ வண்டிங்க, எவ்ளோ மக்கள், அதனால எழும்புற தூசு.....அம்மம்மா.... இருந்தாலும் பழகிடுச்சி. இந்த மாதிரி எரிச்சலுக்கு மத்தியில என் பாட்டி வீட்டுக்கு பின்னால அழகான சிவன் கோவில் இருக்கு. சாமிய பிடிக்குதோ இல்லயோ அந்த கோவிலோட கட்டிட அமைப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். போன்னேரி சிவன் கோவில்ல இருந்து அடுத்த blog-ல பாக்கலாம்.

அப்புடன்,
கிச்சா.
www.zazendesigns.com

Saturday, December 30, 2006

Ponneri Taluk

நோபல் கவி தாகூர் சொன்னது போல,"கடவுள் படைக்கும் எதற்கும் மனிதன் தன் முயற்சியால் அழகு சேர்க்க விழைகிறான்". அப்படி அழகு சேர்க்க விழைந்த பண்டைய மனிதன் தான் லெமூரியக் கண்டமாக இருந்த தென் இந்தியாவை பல மாநிலங்களாக்கி அழகு பார்த்தானோ. அப்படி கூறு போடப்பட்ட மாநிலங்களில் தனிச்சிறப்பு வாய்ந்தது தமிழ்நாடு. மொழியாலும், கலாச்சாரத்தாலும், கூட்டுக்குடும்ப முறையாலும் உலக நாடுகலால் கவனிக்கப்பட்ட நாடு இது. "கல்வியிற் சிறந்த தமிழ் நாடு புகழ் கம்பன் பிறந்த தமிழ் நாடு", என பாரதி பாடியது போல - கல்வியிலும் சிறந்த நாடு இது.
சில வாரங்கலுக்கு முன் நாசா விண்வெளி ஆய்வுக்கூடம் பேசும் தொழில் நுட்பத்துடன் கூடிய செயற்கைக்கோளை மற்ற கிரகங்களுக்கு அனுப்பியது. அதில் தமிழ் மொழியும் ஒன்று. சிறப்பு என்னவெனில் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே மொழி தமிழ் மொழி. இவ்வளவு சிறப்புகள் கொண்ட தமிழ் நாட்டில் திருவள்ளூர் மாவட்டமும் ஒன்று.
இது உலக கலாச்சாரத்தின் நுழைவு வாயிலான சென்னை, பட்டு சேலை, கோயில், சிற்பக் கலை மற்றும் ஆதிசங்கரரால் நேரடியாக நிர்மானிக்கப்பட்ட மடம் ஆகியவற்றால் சிறப்பு பெற்ற காஞ்சி, மலைகலாலும், வான் ஆராய்ச்சி தொலை நோக்கியுள்ள இடமாகவும், நவாப் வம்சம் வாழ்ந்த இடமாகவும் அறியப்படும் வேலூர், வங்காள விரிகுடா, மற்றும் ஆந்ரா மாநிலத்தால் சூழப்பட்டுள்ளது.
திருத்தனி முருகன் கோவில், ஆசியாவிலேயே பெரிய சட்டமன்ற தொகுதியான வில்லிவாக்கம், ஆவடி Tank Factory , அம்பத்தூர் தொழிற்பேட்டை, என்னூர் உப்பங்கழி, நீர்மின் நிலையம், பழவேற்காடு பறவைகள் சரணாலயம், மாதவரம் பால் பண்ணை என பல சிறப்புகள் இருந்ததளும் - வேறு மாவட்டத்திற்கு இல்லாத சிறப்பு திருவள்ளூர் மாவட்டத்திற்கு உண்டு. அது என்னவெனில் - முதன்முதலாக தாலுகா அலுவலகமும்(taluk Office), பஞ்சாயத்து அலுவலகமும் (BDO Office) தனித்தனியே தொடங்கப்பட்ட மாவட்டம் இது.
இந்த மாவட்டத்தின் மூன்று கோட்டங்களில் பொன்னேரியும் ஒன்று. மீஞ்சூர், சோழவரம், பழவேற்காடு ஊராச்சிகள் பொன்னேரி தாலுகாவில் அடங்கும். இந்த மூன்று ஊராச்சிகளின் தலைமையிடமாக ம்ட்டுமன்றி, மூன்று நீதிமன்றம், பதிவாளர் அலுவலகம், அரசு கலை மற்றும் அறிவியியல் கல்லூரி, அரசு ஆடவர் பள்ளி, அரசு பெண்கள் பள்ளி, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், வருவாய் அலுவலகம், மாவட்ட கிளை நூலகம் என சுற்றியுள்ள 80 கிராமங்கள் கூடும் இடமாகவும் உள்ளது.
இனி வரும் கட்டுரைகளில் 2 கி.மீ சதுர பரப்பு கொண்ட பொன்னேரி பற்றியும், அதை சுற்றியுள்ள சுற்றுலா தளம், மற்றும் இதர சிறப்பான தகவல்கலை பகிர்ந்துகொள்வோம்.
மீண்டும் சந்திப்போம்,
கிருஷ்ண பிரபு,
பஞ்செட்டி.