Sunday, January 7, 2007

God Siva temple in ponneri

என்னுடைய பாட்டி வீட்டில் தினமும் சிவ பூஜை இருக்கும். பூஜைக்கு தேவையான பூக்களை தினமும் அதிகாலையில் நான் பறித்து பாட்டியிடம் கொடுப்பேன். பாட்டி பூவை மாலையாக்கி இறைவனுக்கு படைப்பார்கள். மீதமுள்ள மலர்களை அருகிலுள்ள சிவன் கோவிலுக்கு நான் எடுத்துச்செல்வேன். பண்டைய கால அரசர்களால் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்ட மிகவும் பழைமை வாய்ந்த கோவில் இது. காற்றில் இலை அசையும் சப்தமும், தன்னுடைய குஞ்சுகளுக்கு தீனி கொண்டுவரும்போது பறவைகள் எழுப்பும் இறைச்சலும் கடவுளுக்கு கேட்குமெனில் நானும் அமைதியுடன் கூடிய சப்தத்துடன் கோவிலுக்கு சென்ற காலடி ஓசைகூட கடவுளுக்கு கேட்டிருக்குமோ?. நல்ல கோடையில் கூட கோவிலுக்குள் உள்ள குளுமை என்னை ஆச்சர்யமூட்டும். பண்டிகை நாட்களில் இந்த கோவிலுக்குள் போகவே முடியாது. எனக்கு எங்கேயும் வராத குரோதம் அங்கேதான் வரும். ஏதோ அமைதியான இடம் என்று மன அமைதிக்காக வரலாம் தவறு இல்லை. வாழ்க்கையில வணக்கம் போட்டு போட்டே முன்னேற நினைகும் மனிதர்கள் எல்லா இடங்களிலும் இருப்பார்கள். அப்படி வணக்கம் போடுகிறவர்களுக்கு பண்டிகையென்று தெரியவரும் போது சிவன் மேல் உள்ள மரியாதை மிகவும் கூடிவிடும். அதை தவறு என்றும் சொல்வதற்கில்லை. எல்லாருக்குமே அதில் ஒரு இனம் புரியாத நிம்மதி.
கோவிலுக்குள் சென்றதும் முதலில் சிவ தரிசனம் கிடைக்கும். அவருக்கு அருகில் அம்மன் தரிசனம் பிறகு ஆழ்வார்கள், சூரிய பகவான், வினாயகர், தக்ஷணா மூர்த்தி, பிரம்மா, அபிதகுஜாம்பாள், முருகர் - வள்ளி, தெய்வானையுடன், ஆஞ்சநேயர், ஐயப்பன், கடைசியாக பைரவர் என்று சுற்றி சிவனிடம் வந்து சேரலாம். என் பாட்டி சொல்லிய இதிகாச கதைகளை சொல்ல வேண்டுமெனில் சுதா மூர்த்தி எழுதியதைப்போலவே "பாட்டி சொன்ன கதைகள்" என ஒரு புத்தகமாகவே வெளியிடலாம்.
கோவிலுக்குள் ஒரு பாதாள அறை செல்கிறது. இதுவரை அதனுள் சென்றவறில்லை என பாட்டி சொல்லுவாள். எனினும் பண்டைய காலத்தில் பகைவர்களிடமிருந்து தப்பிச்செல்ல முன் யோசனையுடன் கட்டப்பட்ட ஒன்றாகவும் இருக்கலாம். எந்த கோடையிலும் வற்றாத பெரிய குளம் கோவிலுக்கு வெளியில் உள்ளது. இந்த குளத்திற்குள் ஏழு குளம் உள்ளதாகவும் அது பாதாளத்தில் சென்று முடிவதாகவும் பாட்டி கூறுவாள். பண்டைய கால அரசாட்சியில் குளத்திற்கு 100 அடிக்குள் மனித கழிவுகளை வெளியேற்றுபவர்களுக்கு அதிகபட்சமாக சிறைதண்டனை வரை உண்டு. ஆனால் இன்று மக்களாட்சி என்பதால் எது வேண்டுமானாலும் செய்யலாம். ஏனெனில் மக்களால் மக்களுக்காக நடைபெறும் மக்களாட்சியில் மக்களின் வசதிக்காக செய்துகொள்ளும் எதுவும் தவறில்லை. இல்லையெனில் அடுத்த மக்களாட்சி வேறு மனிதர்களால் ஆட்சி செய்யப்படும். இந்த குளத்தின் அருகில் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பாட்டம் சொல்லித்தருகிறார்கள். பெண்கள் கூட சிலம்பு பயிற்சி செய்வதை நான் நேரில் பார்த்ததுண்டு. கோவிலுக்கு பின்னால் ஆரணி ஆறு செல்கிறது. ஆறுடன் சேர்ந்து அடுத்த கட்டுரையில் பயணம் செய்வோம்.
அன்புடன்,
கிச்சா,

No comments: